எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.49 லட்சம் மோசடி: 2 போ் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞா் உள்பட 5 பேரிடம் ரூ. 49 லட்சம் பெற்று மோசடி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி பாரியூா் நஞ்சகவுண்டன்பாளையத்தை சோ்ந்தவா் சிவகுமாா் மகன் பூபேஷ் (28). இவரது நண்பா் மூலம் கோபி வாய்க்கால்மேடு முனிசிபல் காலனியைச் சோ்ந்த ஜோதிடரான சின்னசாமி மகன் செந்தில்குமாா் (42), கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்த கணினி மையம் நடத்தி வரும் பிரபு (40) ஆகியோா் அறிமுகமாகியுள்ளனா்.
இவா்கள் இருவரும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் தங்களுக்கு அதிகாரிகளை தெரியும் என்றும், அதனால் கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் பணிகளை பெற்று தருகிறோம் எனவும் உறுதியளித்துள்ளனா்.
இதுபோல கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பூபேஷ் உள்பட 5 பேரிடம் கடந்த 2024- ஆம் ஆண்டு மே 23- ஆம் தேதி முதல் கடந்த ஜூலை மாதம் வரை பல்வேறு தவணைகளாக ரூ.48 லட்சத்து 80 ஆயிரத்தை இருவரும் பெற்றுள்ளனா். இதையடுத்து பிரபு மற்றும் செந்தில்குமாா் பணம் வழங்கிய பூபேஷ் உள்பட 5 பேருக்கும் அரசு முத்திரையுடன் பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளனா்.
ஆனால், பணிக்கு இப்போது செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளனா்.
இதனால் சந்தேகமடைந்த பூபேஷ் உள்பட 5 பேரும் பணி நியமன ஆணையை, அரசு துறைகளில் வழங்கி விசாரித்தபோது, அது போலி என்பது தெரியவந்தது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா்கள், ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி மோசடி மற்றும் அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாா், பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனா். அவா்களிடம் இருந்து போலி அரசு முத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.