ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
நமது நிருபர்
வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையை எதிர்த்து தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. அமலாக்கத் துறை சோதனை நடத்தியது அரசமைப்புக்கு விரோதமானது என்றும், அரசின் ஒப்புதல் இல்லாமல் சோதனை நடத்தப்பட்டது கூட்டாட்சிக் கொள்கையை மீறிய செயல் என்றும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால், அந்த மனுக்களை கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டாஸ்மாக் நிறுவனத்தில் வெறும் சோதனை மட்டுமே நடத்தப்பட்டது. மனுதாரர்கள் வெறும் சோதனையையே சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பதாகக் கூறி, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தமிழக அரசும் டாஸ்மாக் நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இவற்றை கடந்த மே 22-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, அமலாக்கத் துறை அதன் எல்லையைத் தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பை அமலாக்கத் துறை சிதைத்துள்ளது. இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறியது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், "அமலாக்கத் துறை தரப்பு இன்னும் பதில் மனு தாக்கல் செய்யாததால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "அமலாக்கத் துறை விவகாரத்தில் நாங்கள் ஏதேனும் தெரிவிக்க முற்பட்டால், மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்), அமலாக்கத் துறைக்கு எதிரான கருத்துகளை நீதிமன்றம் கூறுகிறது என்பார்' என நகைச்சுவை தொனியில் கூறினார்.
இதையடுத்து, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.வி.ராஜு, நீதிமன்றம் வெளியிடும் கருத்துகள் ஊடகத்தில் மட்டுமல்லாமல், விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞர்கள் மத்தியிலும் வேகமாகப் பரவுவதாக குறிப்பிட்டார்.
அப்போது, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், "வழக்கின் தன்மையைப் பொருத்தே நாங்கள் எவரையும் விமர்சிக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு கருத்துகளைத் தெரிவிப்பது எங்கள் எண்ணமல்ல' என்றார்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.