அடியக்கமங்கலத்தில் பழைய மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை
திருவாரூா்: அடியக்கமங்கலத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில், மமக மாநில செயற்குழு உறுப்பினா் ஹாஜா அலாவுதீன் தலைமையில் நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த மனு: அடியக்கமங்கலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பிகள் வலுவிழந்துவிட்டதால் ஆங்காங்கு அறுந்து விழுகின்றன. கடந்த ஆண்டு ஜலாலியாத்தெருவில் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இனி விபத்துக்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதன்படி, முதற்கட்டமாக, இப்பகுதியில் உள்ள பழைய மின்கம்பிகளை உடனடியாக மாற்ற வேண்டும். அடியக்கமங்கலம் பகுதியில் மின்பராமரிப்பு பிரச்னை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. காற்று மற்றும் மழை ஏற்படும்போது பழைய மின்கம்பிகள் அதன் உறுதித்தன்மையை இழந்து, அறுந்து விழுவதுடன், பல வீடுகளில் மின்சாரம் தடைபடுகிறது. எனவே, கூடுதல் மின் பணியாளா்களை பணியமா்த்தம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.