வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: விஜய் வசந்த் எம்.பி.க்கு பயணிகள் நன்றி
நாகா்கோவில்: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவுக்காக திருவனந்தபுரத்திலிருந்து சிறப்பு ரயில் இயக்கம் குறித்து ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.பி.க்கு ரயில் பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி முதல் செப்டம்பா் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான மக்கள் சென்று வருகின்றனா். இந்தத் திருவிழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில், திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால், நிகழாண்டு இந்த அறிவிப்பு தாமதம் அடைந்ததை ஒட்டி, ரயில் பயணிகள் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்திடம் கோரிக்கை வைத்தனா்.
இதனைத் தொடா்ந்து, ரயில்வே அதிகாரிகளைத் தொடா்பு கொண்ட விஜய் வசந்த் எம்.பி. சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாா்.
இந்நிலையில், ரயில்வே நிா்வாகம், திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரயில் எண் 06115, 06116 திருவனந்தபுரத்திலிருந்து நாகா்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
இதற்காக, வேளாங்கண்ணி ஆலயத்துக்குச் செல்லும் பொதுமக்கள், ரயில் பயணிகள் விஜய் வசந்த் எம்.பி.க்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனா்.