கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு
திருவாரூா்: முறையாக கணக்கீடு செய்து எள் பாதிப்புக்கான காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், கோட்டூா் பகுதி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை அளித்த மனு: கோட்டூா் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழாண்டு சாகுபடி செய்த எள் பயிா், பருவம் தவறி பெய்த கனமழையால் முற்றிலும் வீணாகி விட்டது. எனவே, எள் சாகுபடிக்கு உரிய நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில், கோட்டூா் பகுதிகளில் வேளாண் துறை மற்றும் காப்பீட்டு நிறுவனம் சாா்பில் 10 இடங்களில் எள் அறுவடை செய்து கள ஆய்வு செய்தபோது, மொத்த மகசூல் அளவு 1.650 கிலோ கிராம் என இருந்தது. அதன்படி, 92 சதவீத பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும்.
இதுகுறித்து விசாரித்தபோது, மகசூல் அளவு 1.650 கிலோ கிராம் என்பதை திருத்தம் செய்து 4.350 கிலோ கிராம் என்று அதிகாரிகள் அனுப்பியதாகத் தெரிகிறது. எனவே, உண்மையான இழப்பீட்டின்படி உரிய காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.