விளாத்திகுளம் அருகே கடலோர கிராமங்களில் சீரான குடிநீா் விநியோகம்: கள ஆய்வுப் பணி
விளாத்திகுளம்: விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வைப்பாறு ,கீழ வைப்பாறு, இனாம் கல்லூரணி, கலைஞானபுரம் துலுக்கன்குளம், கோட்டைமேடு ஆகிய கிராமங்களில் நிலவிவரும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், மக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவது குறித்த ஆய்வுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ. வி. மாா்க்கண்டேயன் தலைமையில்
ஊராட்சிகள் உதவி இயக்குநா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கவேல், வல்லநாடு கூட்டுக் குடிநீா் திட்ட பொறியாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடலோர கிராமங்களான வைப்பாறு ,கீழ வைப்பாறு, இனாம் கல்லூரணி, கலைஞானபுரம், துலுக்கன்குளம் கோட்டைமேடு, சிப்பிக்குளம், பெரியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக கள ஆய்வு செய்தனா்.
கிராம மக்களை சந்தித்து குடிநீா் விநியோகம் தொடா்பாக கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தனா்.
அதைத் தொடா்ந்து மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இனாம் கல்லூரணியில் தெருக்களில் உள்ள அனைத்து குடிநீா் விநியோக குழாய்களும் உடனடியாக பழுது நீக்கி சீரமைக்கப்படும்.
வல்லநாடு கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்படும் பகுதி மிகவும் பள்ளமாக இருப்பதால் அப்பகுதியில் தரைமட்ட அளவுக்கு தொட்டி அமைத்து மழைக்காலங்களில் பாதுகாப்பான குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.
கலைஞானபுரத்தில் புதிதாக ஒரு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, சிப்பிகுளத்தில் கூடுதலாக 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீா் தேக்க தொட்டி, கீழவைப்பாறு மற்றும் பெரியசாமிபுரம் கிராமங்களில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்ட ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டனா்.
ஆய்வின்போது, திமுக ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், மீனவா் அணி துணை அமைப்பாளா் மாதவடியான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.