தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்
தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, திமுக, ஆர்ஜேடி உள்ளிட்ட "இண்டி' கூட்டணியைச் சேர்ந்த 8 கட்சிகள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி விமர்சித்து வருகின்றன.
இது தொடர்பாக தாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது செய்தியாளர் சந்திப்பில் பதில் கூறாமல் தங்களை அவர் விமர்சித்துள்ளதாக அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா, தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
"திருடன் - திருடன்' என்று கூச்சல் எழுப்புவது ராகுல் காந்தியின் வழக்கம். தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக அவர் விமர்சித்து வருகிறார். ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள ராகுல், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் போன்றவர்கள் தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் மீது திருட்டுப் பட்டம் சுமத்துவது முரணானது.
ராகுல் காந்தியைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள புகார்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தனது செய்தியாளர் சந்திப்பில் விரிவாக பதிலளித்துள்ளார். ஆனால் சதி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூச்சலிடுகின்றன.
இந்தியாவில் கலகம் போன்ற சூழல் உருவாகி தாங்கள் அரசியல் ரீதியாக ஆதாயம்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதுவே அவர்களது முயற்சியாகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம், அந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தை விட எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு அதிக அதிகாரம் படைத்ததா?
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக கண்ணியக் குறைவான வார்த்தைகளை ராகுல் காந்தியும் அவரது கட்சியினரும் பயன்படுத்துகின்றனர். இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் விரக்தியைக் காட்டுகிறது. எந்த விலை கொடுத்தாவது நேரு குடும்பம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது அவர்களின் ஒரே இலக்கு.
கடந்த மக்களவைத் தேர்தல் தவறான வாக்காளர் பட்டியல்களின் அடிப்படையில் நடத்தப்பட்டதால் மக்களவையைக் கலைக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கையை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா வழிமொழிந்துள்ளார்.
இதே தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தல்களில் வென்றுதான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 2011 முதல் முதல்வராக இருக்கிறார். அவர் மேற்கு வங்க சட்டப் பேரவையைக் கலைப்பாரா? அதேபோன்று தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் தயாரா?
பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களைக் காக்கவும் அவர்களின் வாக்குகளைப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெறுவதுமே இந்தக் கட்சிகளின் நோக்கம் என்று சம்பித் பாத்ரா தெரிவித்தார்.