ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை
சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவையில் சுபான்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் தொடர்பான விவாதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை காலை தொடங்கிவைத்தார். அப்போதே பிகாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டன.
கடும் அமளிக்கிடையே அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில் "இந்திய விண்வெளி வீரர் ஒருவர் வரும் 2040-ஆம் ஆண்டு நிலவில் தரையிறங்குவார். வளர்ந்த பாரதம் என்ற கருத்துருவாக்கத்தை அவர் அதன்மூலம் நினைவுபடுத்துவார்' என்று தெரிவித்தார். எனினும், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதம் பாதியிலேயே நின்றுபோனது.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த இந்தியாவின் முதல் விண்வெளி வீரரைப் பற்றி மக்களவையில் விவாதம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த விவாதம் நாட்டின் பெருமிதம் மற்றும் சாதனைகள் பற்றியதாகவும் எதிர்காலத்தில் தேசியப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாகவும் நடத்தப்பட்டிருக்கும். எனினும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்கிய விதம் துரதிருஷ்டவசமானது.
எதிர்க்கட்சிகள் நடந்துகொள்ளும் முறை மிகவும் அதிருப்தி அளிக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் ராணுவ மற்றும் அறிவியல் சார்ந்த நலன்களுக்கு முக்கியமான விண்வெளி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விண்வெளித் துறையில் இந்தியா எட்டிவரும் உச்சமானது முன்னெப்போதும் நாம் கண்டிராததாகும்.
மக்களவையில் இது தொடர்பான விவாதம் தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் அதில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான விமர்சனத்தையும், ஆலோசனைகளையும் முன்வைத்திருக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.