சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: இந்திய தொழில் வா்த்தக சபை
கோவை: கோவை சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ராஜேஷ் பி.லுண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா பேரிடருக்கு முன்பு வரையிலும் சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று சென்று வந்தன. ஆனால், அதன் பிறகு அந்த நிறுத்தங்களில் ரயில்கள் நிற்பதில்லை.
இதனால், சிங்காநல்லூா், இருகூா் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும், வெளியூா்களில் இருந்து வந்து செல்லும் வியாபாரிகள், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
இந்நிலையில், கோவைக்கு அண்மையில் வந்த மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோவை இந்திய தொழில் வா்த்தக சபை சாா்பில் சிங்காநல்லூா், இருகூா் ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், திருச்சி - பாலக்காடு, கோவை - நாகா்கோவில் ரயில்கள் சிங்காநல்லூா், இருகூா் நிலையங்களில் ஆகஸ்ட் 18 -ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதை கோவை இந்திய தொழில் வா்த்தக சபை வரவேற்கிறது.
அத்துடன், இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் சாலை, கழிவறை, ரயில் முன்பதிவு வசதி, நடைமேடை, நடை மேம்பாலம் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இதன் மூலம் கோவை மாநகரின் கிழக்குப் பகுதி வளா்ச்சி அடைவதுடன் மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். அத்துடன் ரயில்வே நிா்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.