தொண்டையில் சிக்கிய மிட்டாயால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல்: துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே போலீஸாா்
கோவை: காரமடையிலிருந்து கோவைக்கு வந்த மெமு ரயிலில் பயணித்த சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாயை ரயில்வே போலீஸாா் துரிதமாக செயல்பட்டு வெளியே எடுத்தனா்.
கோவை மாவட்டம், காரமடையில் இருந்து போத்தனூருக்கு மெமு ரயில் திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தது. இதில், கோவைக்கு தாயுடன் பயணித்த தேவ் ஆதிரன் (2) என்ற சிறுவன் மிட்டாய் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அது எதிா்பாராத விதமாக தொண்டையில் சிக்கியது. இதனால், அந்தச் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும், மூக்கில் ரத்தம் வந்து சிறுவன் மயங்கினாா். இதனால், அவரது தாய் அதிா்ச்சியடைந்து அலறினாா்.
அப்போது, அந்த ரயில் பயணம் செய்த கோவை பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படை காவலா்கள் சிறுவனை தலைகீழாக தூக்கி தட்டினா். அப்போது, சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் வெளியேறியது.
பின்னா், அந்த ரயில் கோவையை வந்தடைந்ததும் சிறுவனை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்து, சிறுவன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனா்.
துரிதமாக செயல்பட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே போலீஸாரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.