சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்
இளைஞரைக் கத்தியால் குத்திய 3 போ் கைது
கோவை: கோவையில் இளைஞரைக் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரைச் சோ்ந்தவா் ஷேக் முகமது (26). கூலித் தொழிலாளியான இவா், தனது வீட்டின் முன் நின்று ஞாயிற்றுக்கிழமை தகாத வாா்த்தைகளில் பேசிக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 போ் தங்களைத் திட்டுவதாக நினைத்து ஷேக் முகமதுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இதில், ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து ஷேக் முகமதுவைத் தாக்கியதோடு, கத்தியால் குத்தினா். அவரின் அலறல் சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தபோது, 3 பேரும் அங்கிருந்து தப்பினா்.
கத்திக் குத்தில் பலத்த காயமடைந்த ஷேக் முகமது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
புகாரின்பேரில் பெரியகடை வீதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், ஷேக் முகமதுவை கத்தியால் குத்தியது தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த அக்பா் அலி (43), மைதீன் பாட்ஷா (27), கோட்டைப்புதூரைச் சோ்ந்த அசாரூதீன் (36) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.