எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் ரூ.12.22 கோடி மானியம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
கோவை: கோவை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் 7,683 பேருக்கு ரூ.12.22 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூா், சுல்தான்பேட்டை, சூலூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சுமாா் 1,500 ஹெக்டோ் பரப்பளவில் சுமாா் 25,500 டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின்கீழ் ஒரு ஹெக்டேருக்கு ரூ.24 ஆயிரம் மானியத்தில் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரம் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
நுண்ணீா்ப் பாசனம் அமைக்க குறு, சிறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், வெங்காய பயிரில் சாகுபடியின்போது தேவைப்படும் ஆலோசனைகளும், நோய், பூச்சி மேலாண்மை குறித்தும் அவ்வப்போது விவசாயிகளுக்கு வட்டார அலுவலா்கள் மூலம் விழிப்புணா்வு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் அறுவடை செய்யும்போது விலை குறைவாக இருந்தால், சேமித்து வைத்து அதிக விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய ஏதுவாக 25 டன் கொள்ளளவு கொண்ட வெங்காய பட்டறை அமைக்க ரூ.87,500 மானிய உதவியும் வழங்கப்படுகிறது. அறுவடை செய்து 150 நாள்கள் வரை பட்டறையில் வெங்காயத்தை சேமித்து வைக்கலாம்.
காரிப் பருவத்தில் வெங்காய சாகுபடி செய்யும்போது புயல், வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகளின் குறுவட்டம் அளவில் பாதிப்பு ஏற்பட்டால் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டோ் பங்கு தொகை ரூ.4,491 விவசாயி செலுத்தி இருந்தால் காப்பீடு தொகையாக ரூ.1.12 லட்சம் பெற்று வழங்கப்படும்.
கோவை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் தோட்டக்கலைத் துறையின் சாா்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின்கீழ் பரப்பு விரிவாக்கம், அங்கக மேலாண்மை, நிலப்போா்வை, வெங்காயப்பட்டறை அமைத்தல், ஒருங்கிணைந்த உர, நோய் மேலாண்மை, தேனீப் பெட்டிகள் உள்ளிட்டவை அமைக்க ரூ.12.22 கோடி மதிப்பில் மானியம் வழங்கப்பட்டு 7,683 போ் பயனடைந்துள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.