ராஜபாளையம்: ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்... அவதியில் பயணிகள்!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2023 ஜனவரியில் தொடங்கப்பட்டது. சுமார் ரூ. 2.90 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதுவரை, மாற்று ஏற்பாடாக ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையக் கட்டடம் 2024 ஜூன் மாதமே திறக்கப்படுவதாகப் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அது கட்டி முடிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் நிறைவு பெறாததால் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தொடக்கத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. தற்போது அதுவும் முறையான பராமரிப்பின்றி கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் எந்த அடிப்படை வசதியும் தற்போது வரை செய்து தரப்படாமல் தவிக்கவிடும் சூழல் உருவாகியிருக்கிறது. பேருந்துகளும் நகரின் பிரதான சாலையான காந்தி சிலை அருகே நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள்.
மேலும், முறையான மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியிருக்கிறது என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். புதிய கட்டடத்துக்கான வேலைகள் நிறைவு பெற்று, திறக்கும் வரை, பெண்களுக்கான மொபைல் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. குறிப்பாக, மழை நேரங்களில் ஒதுங்கி நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல் சாலையில் நிற்பதாக வேதனை தெரிவிக்கும் பயணிகள், அரசின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.