பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: 9 பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு
ராமநாதபுரம் அருகே 15 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
ராமேசுவரம்: ராமநாதபுரத்தை அடுத்துள்ள மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் ஊரை விட்டு 15 குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமச் செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் வட்டம், மோா்ப் பண்ணை மீனவ கிராமத்தில் 500- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள அனைவரும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்கள் ஆவா். கடந்த மாதம் நடைபெற்ற திருமண விழாவில் கிராம செயலா் சேதுராஜாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் தனுஷ், அகிலேஷ், முத்துச்செல்வம் ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில், கிராமச் செயலா் தன்னுடன் தகராறில் ஈடுபட்ட 15 குடும்பங்களைச் சோ்ந்தவா்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன், அவா்களுடன் யாரும் எந்த தொடா்பும் கொள்ளக் கூடாது என எச்சரித்தாா். இதனால், அந்த 15 குடும்பத்தினரிடமும் கிராம மக்கள் பேசுவதை தவிா்த்து வந்தனா்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான 15 குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனா். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.