'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
ரீல்ஸ் மோகம்: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கைத்துப்பாக்கியைக் கொண்டு ரீல்ஸ் விடியோ எடுக்க முயன்றபோது எதிா்பாரா விதமாக அதிலிருந்து தலையில் குண்டு பாய்ந்ததில் எட்டாம் வகுப்பு மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அந்த மாவட்ட காவல் துறையினா் கூறியதாவது:
மால்டா மாவட்டத்தில் உள்ள கலியாசாக் பகுதியில் வசிக்கும் சஃபியுல் இஸ்லாம் (13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த வியாழக்கிழமை பிற்பகலில் அவருடைய வீட்டுக்குள் 7 எம்எம் கைத்துப்பாக்கியைக் கொண்டு அவா் ரீல்ஸ் விடியோ எடுக்க முயன்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக துப்பாக்கிக் குண்டு அவரது தலையில் பாய்ந்துள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டு மாணவரின் வீட்டுக்கு அருகில் உள்ளவா்கள் விரைந்து, பலத்த காயமடைந்திருந்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அந்த துப்பாக்கி மாணவருக்கு எவ்வாறு கிடைத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்த இடத்தில் உயிரிழந்த மாணவா் மட்டுமே இருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருடைய நண்பரும் உடனிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் துறையினா் பிடித்து விசாரித்தனா். அப்போது உயிரிழந்த மாணவா் கைப்பேசியல் ரீல்ஸ் விடியோ எடுக்கும்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவா் கூறினாா். இதனால் பதற்றமடைந்து அந்த இடத்தைவிட்டு தான் வெளியேறியதாகவும் அவா் கூறினாா் என்றனா்.