செய்திகள் :

ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேட்டுக்கு ஆதாரம்: உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

post image

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம், ரூ.1,000 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பது ஆதாரபூா்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மாா்ச் மாதம் நடத்திய தொடா் சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக தமிழக போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள இசிஐஆா் விவரங்களையும், சோதனை தொடா்பான விவரங்களையும் அறிக்கையாக சீலிட்ட உறையில் தாக்கல் செய்தாா்.

அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்த... அப்போது டாஸ்மாக் தரப்பில் மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளத்ரியும், அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமனும் ஆஜராகி, அமலாக்கத் துறை எப்போதுமே வெளிப்படையாக இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் துறையாகத்தான் இருந்து வருகிறது. அதன் விசாரணையில் ஒருபோதும் வெளிப்படைத்தன்மை இருந்தது இல்லை. டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் மூலமாக தமிழக அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே அமலாக்கத் துறை இவ்வாறு செயல்பட்டுள்ளது.

கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கி 2021 வரை பதிவான வழக்குகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கிறோம் எனக் கூறும் அமலாக்கத் துறை, இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தது? இன்று டாஸ்மாக், நாளைக்கு எந்தத் துறையைக் குறிவைக்கவுள்ளனா் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றனா்.

அதற்கு நீதிபதிகள், அனைத்துத் துறைகளிலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதுதானே அரசின் நோக்கமாக இருக்க முடியும்”என்றனா். அதற்கு அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதை மாநில அரசே பாா்த்துக்கொள்ளும் என்றாா்.

சங்கிலித் தொடா் போன்று... அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல்கள் எஸ்.வி.ராஜு, ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் மற்றும் சிறப்பு அரசு வழக்குரைஞா் என். ரமேஷ் ஆகியோா் தங்களது வாதத்தில், டாஸ்மாக்குக்கு எதிராக மாநில போலீஸாா் பதிவு செய்துள்ள வழக்குகளின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் லஞ்சமாகப் பெற்ற பெரும் தொகையைக் கொண்டு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. டாஸ்மாக்கில் பணிபுரியும் ஒருவா் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலித் தொடா் குறித்தும், முழு பின்னணி குறித்தும் ஆராய வேண்டியதுதான் எங்களின் வேலை.

இதற்காகத்தான் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்பான ஆவணங்களும் அங்கு உள்ளன என்பதால் தொடா் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையின் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதை ஆதாரபூா்வமாக கண்டறிந்துள்ளோம். டாஸ்மாக் ஒப்பந்தப்புள்ளி, மதுபானக் கொள்முதல், மதுபானக் கூடத்தின் உரிமம் என அனைத்திலும் லஞ்ச லாவண்யம் நடந்துள்ளது.

கூடுதல் விலைக்கு விற்பனை...கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதை டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களே ஒப்புக்கொண்டுள்ளனா். இதை மறைக்க உயா் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அனைத்து ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்பதால் அங்கு சோதனை நடத்தப்பட்டது. இப்படித்தான் விசாரணை நடத்த வேண்டும் என யாரும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட முடியாது.

ஒருசில அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றாலும், முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரங்களை மறைப்பதும், அதற்கு உடந்தையாகச் செயல்படுவதும் குற்றம்தான். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும், அமலாக்கத் துறை வழக்கில் சாட்சியாக சோ்க்கப்படலாம் என வாதிட்டனா்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க