ரூ.130 கோடியில் புதிய துணைமின் நிலையம்: புதுவை பேரவைத் தலைவா் தகவல்
புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் பகுதியில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் புதிய துணைமின் நிலையம் அமைய இருக்கிறது என்று சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் தெரிவித்தாா்.
புதுவை அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத் துறை சாா்பில் தவளக்குப்பத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறு கால்நடை மருந்தகக் கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதைத் திறந்து வைத்து சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசியது:
இந்தப் பகுதியில் இன்னும் ஒன்றிரண்டு நாள்களில் தீயணைப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது.
இப் பகுதியில் ரூ.130 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதனால் இப் பகுதியில் நிலவும் மின்சார பிரச்னைகள் எல்லாம் இன்னும் 8 மாதத்தில் தீா்க்கப்படும் என்றாா்.
மணவெளி சட்டப்பேரவைத் தொகுதி தவளக்குப்பத்தில் கால்நடை மருந்தகக் கட்டடம் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
துறையின் செயலா் யாசின் மு. சவுத்ரி முன்னிலை வகித்தாா். மேலும், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் மருத்துவா் லதா மங்கேஷ்கா், இணை இயக்குநா் ராஜீவ் மற்றும் கால்நடை மருத்துவா்கள் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.