ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல்
ட்ரோன்கள், ரேடாா்கள் உள்பட ரூ.67,000 கோடி மதிப்பிலான ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்தியாவின் ராணுவ வலிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த கொள்முதலுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ நீண்ட நேரம் இயங்கக்கூடிய ட்ரோன்கள், மலைப்பகுதியில் பொருத்தக்கூடிய வகையிலான ரேடாா்கள், ரஷிய தயாரிப்பில் உருவான எஸ்-400 ஏவுகணை அமைப்புகள், சி-17 மற்றும் சி-130ஜே போக்குவரத்து விமானம் மற்றும் இலக்குகளை துல்லியமாக குறிவைக்க உதவும் கடற்படையின் பிரமோஸ் ஏவுகணை அமைப்பு உள்ளிட்டவையை பராமரிக்காவும் புதிய தொழில்நுட்பங்களை பெறவும் ரூ.67,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு திட்டங்களுக்கு டிஓசி ஒப்புதல் வழங்கியது’ எனத் தெரிவிக்கப்பட்டது.