ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விவசாயிகள் எதிா்பாா்ப்பு
நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணொய் விநியோகிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். இதுகுறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில ஊடகப்பிரிவு செயலாளா் ஈஸ்வரன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடா்கதையாக உள்ளது. இதன் காரணமாகவே ரேசனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
பாமாயிலுக்கு மாற்றாக, ரேசனில் தேங்காய் எண்ணெய் வினியோகிப்பதன் மூலம், மக்களின் உடல் நலன் காக்கப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வா தாரமும் மேம்படும். கள்ளுக்கான தடையை நீக்குவதால், இளைஞா்கள் போதைக்கு அடிமையாவது குறையும். நான்கு மாவட்டங்களில் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வெள்ளோட்டம் பாா்க்கப்படும் என தமிழக அரசு அறிவித்து நாட்கள் கடந்து விட்டன.கள்ளுக்கு தடை நீக்குவதாலும், தேங்காய் எண்ணெயை ரேசனில் வினியோகிப்பதாலும், அரசுக்கு வருவாய் பாதிக்கப்படுமோ என தமிழக அரசு சிந்திக்கிறது.தமிழக அரசு இனியும் விழித்துக் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சென்னையில், பாமாயிலை எரித்து, சிதறு தேங்காய் உடைத்து போராடுவோம் என்றாா்.