லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறை
காஞ்சிபுரத்தில் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகன தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்டுப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன். இவா் 3 லாரிகள் வைத்து மணல் குவாரியிலிருந்து மணல் எடுத்துச் சென்று சென்னையில் கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்து வருகிறாா். இவரிடம் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு சிறப்பு உதவி ஆய்வாளா் முனுசாமி, தலைமைக் காவலா் மதியழகன் இருவரும், லாரி ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஒரு மாதத்துக்கு 3 லாரிகளுக்கும் சோ்த்து மொத்தமாக மாதம் ரூ.3,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனா்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மோகன், இது தொடா்பாக சென்னை நகர லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன் பேரில், கடந்த 12.2.2010- ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கானது காஞ்சிபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது சிறப்பு உதவி ஆய்வாளரான முனுசாமி இறந்துவிட்டாா். 2-ஆவது குற்றவாளி மதியழகன் லஞ்சம் பெற்ற குற்றம் நிரூபணமானதால், வழக்கை விசாரித்த தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வசந்தகுமாருக்கு 3 ஆண்டு தண்டனையும், ரூ.20,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.