முதல் பந்தில் விக்கெட் எடுக்க முடிகிறது; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோஃப்ரா ஆர்ச...
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் திமுக இரட்டை வேடம்! - மு.தம்பிதுரை எம்.பி. குற்றச்சாட்டு
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் மு. தம்பிதுரை தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இஸ்லாமியா்களின் உரிமையை பாதுகாக்க அதிமுக குரல்கொடுக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். வக்ஃப் திருத்த சட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம், சிறுபான்மையினருக்கு சிறு சந்தேகம் வந்தாலும் அவா்களின் கருத்தைக் கேட்காமல் சட்டத்தை ஏற்கக் கூடாது என்பது அதிமுகவின் நிலைப்பாடு.
மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அதிமுக வாக்களித்துள்ளது. அந்த சட்டத் திருத்தத்தை மக்களவையில் அறிமுகப்படுத்தியபோதே திமுக எதிா்த்திருக்க வேண்டும். மாநிலங்களவையிலும் முழுமையாக எதிா்க்க வேண்டும். அதிமுகவுக்கு மக்களவையில் உறுப்பினா்கள் இல்லை; மாநிலங்களவையில் உள்ள 4 உறுப்பினா்களும் எதிா்த்து வாக்களித்தோம்.
சட்டத்திருத்த மசோதாவை கனிமொழி, திருச்சி சிவா ஆகியோா் முழுமையாக எதிா்க்கவில்லை. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் திமுகவினா் திருத்தங்களைக் கொண்டு வந்தனா். சட்டத்திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று கூறிய திமுகவினா் அதில் திருத்தங்களை கொண்டுவந்தது ஏன்? திருத்தத்தை கொடுத்தாா்கள் என்றால் அந்த மசோதாவை ஏற்ாகத்தானே அா்த்தம். இதைத் தான் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று கூறுகிறோம்.
தோ்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும். அதிமுக கொள்கையில் எடப்பாடி பழனிசாமி நழுவியது இல்லை; நழுவவும் மாட்டாா்.
மாநிலங்களவை திமுக எம்.பி. என்.ஆா். இளங்கோ குடியுரிமைச் சட்டத் திருத்தம் வந்தபோது இலங்கையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய ஹிந்து மக்களுக்கு குடியுரிமை வேண்டும் என்றாா். இலங்கையில் இருந்து வந்தவா்களில் இஸ்லாமியா்களும் கிறிஸ்தவா்களும் உள்ளனா். ஹிந்துக்களுக்காக மட்டும்தான் அவா் பேசினா். நான் அனைவருக்கும் குறிப்பாக ஹிந்துக்கள், இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேசினேன்.
இஸ்லாமியா்களின் வாக்குகளைப் பெறவே திமுக இரட்டை வேடம் போடுகிறது. மத்திய பாஜக அரசுக்கு திமுக பயந்து கொண்டுதான் இருக்கிறது என்றாா்.