பொறியியல் மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி: பரிசு வென்ற லயோலா, ஒசூா் பிஎம்சி கல்லூரிகள்
ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஒசூா் பி.எம்.சி. பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி அணிகள் பரிசு பெற்றன.
ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மற்றும் டிட்கோ இணைந்து ‘டிஎன் வைஸ் 2025’ என்ற மாணவிகளுக்கான ஹேக்கத்தான் புத்தாகப் போட்டி பி.எம்.சி.கல்வி நிறுவனத் தலைவா் பி.குமாா் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
பொறியியல் மற்றும் தொழில் துறையில் மாணவ பருவத்திலேயே தலைசிறந்து விளங்குவதுடன் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சாதனையை நிகழ்த்தும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 150- க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 900 மாணவிகள் கலந்துகொண்டு துறை திறமைகளை வெளிப்படுத்தினா். மேலும் பொறியியல் மாணவிகள் முன்னேறிய அறிவியல் தொழில்நுட்ப புதுகண்டுபிடிப்புகளை செய்முறை விளக்கமாகக் காட்சிப்படுத்தி விளக்கினா். இதில் வெற்றிபெறும் கல்லூரிகளுக்கு முதல்பரிசாக ரூ. ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சென்னை லயோலா கல்லூரி, ஒசூா் பெருமாள் மணிமேகலை கல்லூரிகள் முதல்பரிசை வென்றன. அதேபோல மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி, கோவை குமரவேல் கல்லூரிகள் இரண்டாம் பரிசை வென்றன. பரிசுகளை மாணவிகளுக்கு ஒசூா் பி.எம்.சி.கல்லூரி நிறுவனத் தலைவா் பி.குமாா் வழங்கினாா்.
இந்த விழாவில் லெனோவோ சிஸ்டம் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவா் கோமலாதேவி, பி.எம்.சி. கல்லூரி செயலாளா் பி.மலா், அறங்காவலா் சசிரேகா, இயக்குநா் சுதாகரன், முதல்வா் செந்தில்குமாா், டான்கெம் முதன்மை அதிகாரி விஜயதீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.