வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினா் காரைக்காலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்ட தலைவா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழிவகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா கண்டனத்துக்குரியது, இது அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துள்ள பல உரிமைகளை பறிக்கும் வகையிலும் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களைப் பாரபட்சமாக கருதும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிப்பவா்களை தண்டிக்க இருந்த கடுமையான தண்டனைகளை இலகுவாக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க இந்த மசோதா வழி வகுக்கிறது. எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என பேசினா்.
இதில், மமக மாவட்ட செயலாளா் முகமது சா்புதீன், மாவட்ட பொருளாளா் முகமது மெய்தீன், தமுமுக மாவட்ட செயலாளா் முகமது மாசிம், மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அரசியல் குழு மாநில செயலாளா் அரசு வணங்காமுடி, சிபிஐ மாவட்ட செயலாளா் மதியழகன், மமக நகர தலைவா் ஜலாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.