வேலைவாய்ப்பின்மை அரசுக்கு பெரிய சவால்: உ.பி. அரசு
உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதாக அம்மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை குறித்து அம்மாநில சட்டப்பேரவையில் சமாஜவாதி கட்சி கேள்வி எழுப்பியது. இதனையடுத்து, மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் அனில் ராஜ்பர் பதிலளித்ததாவது, ``லக்னௌவில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் 28,333 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ. 37.33 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகள் பெறப்பட்டு, ரூ. 6 லட்சம் கோடி முதலீட்டு முன்மொழிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறும். நாட்டில் திறமையான இளைஞர்களைக் கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது.
வேலைவாய்ப்பின்மை மாநில அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தாலும், அதற்கேற்றவாறு மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2017 முதல் இதுவரையில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மாநில அரசு பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிக்க:ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, தமிழைக் காப்பேன்: முதல்வர்
தற்போது, தேசிய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.2 சதவிகிதமாக இருந்தாலும், உத்தரப் பிரதேசத்தில் 3 சதவிகிதம் என்ற நிலையிலேயே உள்ளது. சமாஜவாதியின் ஐந்தாண்டு ஆட்சியில் 1.40 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியது; ஆனால், பாஜக தலைமையிலான 7.50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது.
அதுமட்டுமின்றி, நமது திறமையான தொழிலாளர்களின் திறனை பல்வேறு நாடுகளும் அங்கீகரித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து பணியாற்றி வருகிறது. இதுவரையில் 5,600 திறமையான தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு உத்தரப் பிரதேசம் அனுப்பியுள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடமிருந்து எந்த புகாரும் இல்லை. மேலும் குரோசியா, ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனுப்பப்பட உள்ளனர்.
பல்வேறு நாடுகளில் பணிபுரியும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், கோடிக்கணக்கான பணத்தை அனுப்புவதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றனர். இதனிடையே, 5000 தொழிலாளர்களைக் கொண்ட மற்றொரு குழுவையும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது’’ என்று கூறினார்.