சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
வக்ஃப்: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை நீட்டிக்க ஒருமனதாக முடிவு
வக்ஃப் திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்க குழு உறுப்பினா்கள் ஒருமனதாக முடிவு செய்தனா்.
நவம்பா் 29-ஆம் தேதியுடன் குழுவின் பதவிக்காலம் நிறைவடைவிருந்த நிலையில் முறையான விவாதங்களை மேற்கொள்ளாமல் பணிகளை விரைந்து முடிப்பதில் அவசரம் காட்டி வருவதாக அந்தக் குழுவின் தலைவா் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் மீது எதிா்க்கட்சி உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா். இதனால் புதன்கிழமை நடைபெற்ற குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், திமுக எம்.பி. ஆ.ராசா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி ஆகியோா் வெளிநடப்பு செய்தனா்.
இதையடுத்து, குழுவின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாஜக உறுப்பினா்கள் மற்றும் ஜகதாம்பிகா தெரிவித்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மீண்டும் பங்கேற்றனா். அப்போது வக்ஃப் மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்க அந்தக் குழு உறுப்பினா்கள் ஒருமனதாக முடிவு செய்தனா்.
இந்த தீா்மானத்தை மக்களவையில் ஜகதாம்பிகா பால் முன்மொழிவாா் எனவும் மேலும் சில மாநிலங்களுக்குச் சென்று பலதரப்பினரிடம் இருந்தும் இந்தக் குழு கருத்துகளை பெறும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் மசோதா முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில் உள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த மசோதாவை ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இக் குழு தனது அறிக்கையை தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளான வரும் வெள்ளிக்கிழமை (நவ.29) மக்களவையில் தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.