வங்கதேச நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் -நாடாளுமன்றத்தில் அரசு தகவல்
வங்கதேச அரசியல் சூழல், ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல் தொடா்பான நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பான கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடா்பாக 70 போ் கைது செய்யப்பட்டு 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஹிந்துக்கள் உள்பட அனைத்து சிறுபான்மையினரின் நலன்களும் காக்கப்பட வேண்டுமென்று வங்கதேசத்திடம் இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் அந்நாட்டு ஆட்சியாளா்களிடம் தொடா்பில் உள்ளது. வங்கதேசத்தில் துா்கா பூஜை விழாவின்போது ஹிந்து கோயில்கள், பூஜை பந்தல்கள் குறிவைத்து தாக்கப்பட்டது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தவிர கோயில்களில் இருந்த பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து கோயில்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாக வங்கதேச அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் வெளியுறவுச் செயலா் வங்கதேசத்துக்குச் சென்றபோதும் இந்தியா தரப்பு கவலைகள் தெரிவிக்கப்பட்டு, ஹிந்துக்கள், கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.