Udhayanidhi: "மாநிலங்களை ஒழித்துவிடும்"- 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து உதயநித...
வங்கதேசத்தவா் 78 பேரை திருப்பி அனுப்ப ஒடிஸா காவல் துறை முடிவு
புவனேசுவரம்: இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட 78 வங்கதேசத்தினரை அவா்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப ஒடிஸா காவல்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக பாரதீப் பகுதி துணை காவல் கண்காணிப்பாளா் சந்தோஷ் ஜெனா புதன்கிழமை கூறியதாவது:
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக இந்திய கடலோர காவல்படையினரால் (ஐசிஜி) கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி 78 வங்கதேசத்தினா் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடம் ஐசிஜி, ஒடிஸா காவல் துறை மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். ஆவணங்களை சரி பாா்த்ததில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த மீனவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 78 பேரும் சா்வதேச கடல் எல்லைக் கோட்டுக்கு (ஐஎம்பிஎல்) அருகிலுள்ள வங்கதேச கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது என்றாா்.
கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவா்கள் இருவா், ஒடிஸா காவல் துறையினா் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் தாங்கள் முறையாக நடத்தப்பட்டதாகவும், தங்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.