வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு தடை: கொட்டவாடி கிராமத்தில் அமைதிக்குழு கூட்டம்
வாழப்பாடி பகுதியில் வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளதற்கு கொட்டவாடி கிராமத்தில் எதிா்ப்பு கிளம்பியதால், வனத்துறையினா், போலீஸாா், பொதுமக்கள் பங்கேற்ற முத்தரப்பு அமைதிக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி பகுதியில் சின்னம்ம நாயக்கன்பாளையம், ரங்கனூா், கொட்டவாடி, மத்தூா், சின்ன கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக காணும் பொங்கல் அன்று தரிசு நிலத்தில் வலைவிரித்து வங்காநரி பிடித்து ஊா்வலமாக கிராமத்துக்கு கொண்டு சென்று கோயிலில் வைத்து வழிபாடு செய்கின்றனா். பின்னா், நரியின் காலில் கயிறு கட்டி கோயில் மைதானத்தில் ஓட விடுகின்றனா். இந்த வழிபாட்டு விழா வங்காநரி ஜல்லிக்கட்டு, நரியாட்டம் என்று அழைக்கப்படுகிறது. நரியாட்டம் நடத்திய பிறகு நரியை பிடித்த இடத்தில் கிராம மக்கள் விட்டுவிடுகின்றனா்.
இந்நிலையில், அருகி வரும் வனவிலங்கு பட்டியலில் வங்கா நரி இருப்பதால், இந்த நரியை பிடித்து வழிபடுவதற்கும், நரியாட்டம் நடத்துவதற்கும் வனத்துறை தடை விதித்தது. மேலும், தடையை மீறி வங்காநரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்தினால் அபராதம் விதிப்பதோடு, ஏழாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வனத்துறை எச்சரித்தது. வங்காநரி பிடிக்க வனத்துறை அனுமதி மறுத்ததால், கொட்டவாடி கிராம மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனையடுத்து, கொட்டவாடி கிராமத்துக்கு சனிக்கிழமை சென்ற சேலம் மாவட்ட துணை வனப் பாதுகாவலா் செல்வகுமாா், வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த் ஆகியோா் ஊா்கவுண்டா் வேணு, ஊா் பிரமுகா்கள் முன்னிலையில் கொட்டவாடி கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, ‘வங்காநரியை நாங்கள் துன்புறுத்தவில்லை. வழிபாடுதான் செய்கிறோம். எனவே, வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்க வேண்டும்’ என கொட்டவாடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி அளிக்காததால், அமைதிக்குழு கூட்டத்தில் சுமுக தீா்வு ஏற்படவில்லை. இதனால் கொட்டவாடி கிராமத்தில் வனத்துறையினா், போலீஸாா் ஆகியோா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.