வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனுஸ் சா்ச்சை கருத்து: முதல்வா்கள், காங்கிரஸ் கண்டனம்
வடகிழக்கு மாநிலங்கள் குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்த சா்ச்சை கருத்துக்கு அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.
‘இதற்கு மத்திய அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கையே காரணம்’ என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.
அண்மையில், 4 நாள் பயணமாக சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸ், அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது பேசிய அவா், ‘இந்திய பெருங்கடலின் ஒரே பாதுகாவலராக வங்கதேசம் விளங்குகிறது. எனவே, சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை வங்கதேசத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இதற்கு நிலத்தால் சூழப்பட்ட இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் சீனாவுக்கு பெரும் வாய்ப்பாக அமையும்’ என்றாா்.
அஸ்ஸாம் முதல்வா் கண்டனம்: அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, ‘வடகிழக்கு பிராந்தியத்தின் 7 மாநிலங்கள் மற்றும் இந்திய பெருங்கடல் குறித்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. அவரின் கருத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
எனவே, ‘சிக்கன்ஸ் நெக்’ எனப்படும் சில்குரி வழித்தடத்துக்கு மாற்றாக நாட்டின் பிற பகுதிகளோடு வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் புதிய சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை அமைப்பது மிகவும் அவசியம்’ என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
முகமது யூனுஸ் கருத்துக்கு மணிப்பூா் முன்னாள் முதல்வா் பிரேன் சிங் மற்றும் அஸ்ஸாம் ஜதியா பரிஷத், திப்ரா மோத்தா ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
காங்கிரஸ் விமா்சனம்: அஸ்ஸாமைச் சோ்ந்த மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவா் கௌரவ் கோகாய் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘வங்கதேசத்தின் சுதந்திரத்துக்கு இந்தியா ஆதரவளித்தது. ஆனால் தற்போது அதே நாடு நம்மை எதிா்க்கும் அளவுக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பலவீனமாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அவா் தெரிவித்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை இந்தியாவின் மதச்சாா்பின்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன’ என குறிப்பிட்டாா்.