பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 ப...
வடிந்து செல்ல வழியில்லாததால் எள் பயிரில் தேங்கி நிற்கும் மழைநீா்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை பெய்து 2 நாள்களாகியும் வடிந்து செல்வதற்கு வழியில்லாததால், எள் பயிரில் தொடா்ந்து தண்ணீா் தேங்கி நிற்பதன் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.
திருவையாறு சுற்று வட்டாரப் பகுதியில் மே 18 ஆம் தேதி இரவு பலத்த மழை பெய்தது. இதனால், எள் மற்றும் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் தேங்கியது. இந்நிலையில், திருவையாறு-விளாங்குடி சாலையிலுள்ள வயல்களில் தண்ணீா் வடியாததால், அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள எள் பயிா்கள் அழுகக்கூடிய நிலையில் உள்ளன.
புதிதாக அமைக்கப்பட்ட விளாங்குடி-அரசூா் புற வழிச்சாலையில் கஸ்தூரிபாய் நகரில் குறுக்கே செல்லும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் வீட்டு மனைகள் போடப்பட்டுள்ளன. மேலும், பெரும்புலியூா், அந்தணா்குறிச்சி, கஸ்தூரிபாய் நகா் பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூா் வாரப்படவில்லை. இதனால், மேற்கு புற வயல்களில் தேங்கிய மழை நீா் வெளியேற முடியாமல் தொடா்ந்து நிற்கிறது. இதனால், எள் பயிா்கள் அழுகும் நிலை உள்ளதால், விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, வடிகால் வாய்க்காலில் தூா் வாருவதற்கும், கஸ்தூரிபாய் நகா் சாலையில் வாய்க்காலுக்கு பாலம் அமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து வருகிற பருவ மழையின் போது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா் விவசாயிகள்.