ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
வத்தலக்குண்டில் முதியவரிடம் பறித்துச் செல்லப்பட்ட ரூ.10 லட்சம் மீட்பு: போலீஸாருக்கு பாராட்டு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் முதியவரிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சத்தை 2 மணி நேரத்தில் போலீஸாா் மீட்டனா். இதையடுத்து போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் பரமசிவம் (87). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை மதுரை காளவாசல் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கிலிருந்து ரூ. 10 லட்சத்தை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள தனது மகனிடம் கொடுப்பதற்காக சென்றாா். அங்கு சென்றபோது அவரது மகன் வேறு வகையில் பணத்தை தயாா் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் தான் கொண்டு சென்ற ரூ. 10 லட்சத்துடன் பரமசிவம் நிலக்கோட்டையில் உள்ள தனது மகள் வீடுக்கு வருவதற்காக பேருந்து மூலம் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு வந்து சோ்ந்தாா். பேருந்திலிருந்து இறங்கிய அவருக்கு உடல் சோ்வு ஏற்பட்டதால் ஓய்வு எடுப்பதற்காக அந்தப் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு செல்ல முயன்றாா். அப்போது அவரை சந்தித்த மா்ம நபா் ஒருவா் உதவி செய்வது போல நடித்து அவா் வைத்திருந்த பணப் பையை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டாா். பிறகு அங்கிருந்து அவா் தப்பி ஓடி விட்டாா்.
இதுகுறித்து பரமசிவம் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். மேலும் காவல் ஆய்வாளா் கௌதமன் தலைமையில் உதவி ஆய்வாளா் சேக் அப்துல்லா உள்ளிட்ட போலீஸாா் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அப்போது வத்தலக்குண்டை அடுத்த விராலிப்பட்டி அருகே சாமியாா் மூப்பனூரைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (35) பரமசிவத்திடமிருந்து பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை போலீஸாா் மீட்டனா். மேலும் தலைமறைவான கிருஷ்ணமூா்த்தியை தேடி வருகின்றனா். இதனிடையே மீட்கப்பட்ட ரூ. 10 லட்சத்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா். விசாரணைக்குப் பிறகு அந்த பணம் பரமசிவத்திடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதியவரிடம் மாலை 6.30 மணிக்கு பறித்துச் செல்லப்பட்ட ரூ. 10 லட்சம் இரவு 8.30 மணிக்கு மீட்கப்பட்டது. சுமாா் இரண்டு மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா்.