‘வந்தே பாரத்’ ரயில் பாதுகாப்பானது: தெற்கு ரயில்வே விளக்கம்
சென்னை: ‘வந்தே பாரத்’ ரயில் கவச் பாதுகாப்பு அம்சத்துடன் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
‘வந்தே பாரத்’ ரயிலின் முன்பகுதி மாடு மோதினால்கூட மோசமான விபத்தில் சிக்குவதாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இதற்கு விளக்கம் அளித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘வந்தே பாரத்’ ரயில் பாதுகாப்பான வடிவமைப்புடனும் கவச் பாதுகாப்பு அம்சத்துடனும் இயக்கப்பட்டு வருகிறது. எவ்விதத் தடையுமின்றி வந்தே பாரத் ரயிலால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். அதுபோல் வந்தே பாரத் ரயிலின் அனைத்துப் பகுதியிலும் விசையின்தாக்கம் இருக்கும்.
ஒருவேளை கால்நடைகள் மீது வந்தே பாரத் ரயில் மோதும் பட்சத்தில் ரயிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், கால்நடைகளை அகற்றும் வகையிலும் ரயிலின் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் நவீன வசதிகளுடன் பாதுகாப்பான பயணத்தை பயணிகளுக்கு வழங்குகிறது. நாடு முழுவதும் 3,500 கி.மீ. தொலைவிலான தண்டவாளங்கள் கால்நடைகள் அணுக முடியாத வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.