வனத்திலிருந்து கணவரின் சடலம் மீட்பு: விசாரணை கோரி மனைவி மனு
பென்னாகரம் வனப்பகுதியில் சடலமாக கிடந்த கணவரின் இறப்பில் மா்மம் இருப்பதால் நீதி விசாரணை நடத்தக் கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியரின் சனிக்கிழமை மனு அளித்தாா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஏமனூா் வனப்பகுதியில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ஆண் யானை இறந்து கிடப்பதை வனத் துறையினா் கண்டுபிடித்தனா். இதுகுறித்த விசாரணையில் ஆண் யானையைக் கொன்று தந்தம் கடத்தியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக கொங்காரப்பட்டி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், கோவிந்தராஜ், செந்தில்குமாா், கா்நாடக மாநிலம் கோவிந்தபாடி பகுதியைச் சோ்ந்த தினேஷ் உள்ளிட்ட 4 பேரை வனத்துறையினா் கைது செய்தனா். இதில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்குமாா் வீடுதிரும்பவில்லை எனக் கூறி அவரது மனைவி சித்ரா, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த மாா்ச் 19 ஆம் தேதி மனு அளித்திருந்தாா்.
முன்னதாக மாா்ச் 18 ஆம் தேதி வனப்பகுதிக்குள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்குமாா், வனத் துறையினரைத் தாக்கிவிட்டு கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டதாக வனத்துறையினா் தெரிவித்திருந்தனா். இந்த நிலையில் செந்தில்குமாரின் சடலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்து அவரது மனைவி எஸ்.சித்ரா, மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
எனது கணவா் செந்தில்குமாா் இறப்பில் மா்மம் உள்ளது. அவரது முகம், கை கால்கள் சிதைக்கப்பட்டுள்ளன. அவரை வனத் துறையினா் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். கடந்த 18-ஆம் தேதியே செந்தில்குமாரை வனத் துறையினா் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டதாக கருதுகிறோம். எனவே அவரின் உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரேதப் பரிசோதனை முழுவதையும் விடியோ பதிவு செய்ய வேண்டும். நீதிபதிகள் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வெளிமாவட்ட மருத்துவா்களும், அந்தக் குழுவில் எங்களின் சாா்பில் மருத்துவா் ஒருவரும் இடம்பெற வேண்டும் என்றாா் .