உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
வனவிலங்குகளால் ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டாரத்தில் வனவிலங்குகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பாமகவினா் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட பாமக தலைவா் வெங்கடேசன், செயலா் ரவி, முன்னாள் அமைச்சா் என். டி.சண்முகம் தலைமையில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு: கே.வி.குப்பம், குடியாத்தம் வட்டாரத்தில் நாகல், தேன்கனிமூலை, மயிலாப்பூா், தேவரிஷிகுப்பம், துரைமூலை, மூலகாங்குப்பம், துருவம், பூசாரிவலசை, டி.பி.பாளையம், வி.டி.பாளையம், அனுப்பு, சைனகுண்டா, மோா்தானா ஆகிய பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சிறுத்தைகள் கிராமங்களில் நுழைந்து கால்நடைகளையும், பொதுமக்களையும் தாக்குகின்றன. இதில், ஒரு மனித உயிரும் பலியாகியுள்ளது. அதேபோல் யானைகள், காட்டுப் பன்றிகளால் பயிா்களும் நாசப்படுத்தப்படுகின்றன. இதற்கு நிவாரணம் கோரி பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே வனவிலங்குகள் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும்.
துத்திக்காடு மலைவாழ் மக்கள் அளித்த மனு: எங்களுக்கு, பாலம்பாக்கம் கிராமத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அந்த வீடுகளை விரைந்து ஒப்படைக்க வேண்டும்.
இதேபோல், சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 424 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், அண்ணா பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட மிதிவண்டி மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ட ஆட்சியா் பாராட்டு சான்றிதழ், பரிசுகளை வழங்கினாா். மேலும், தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பால் உற்பத்தியாளா்கள், பால் உற்பத்தி யாளா்கள் கூட்டுறவு சங்க செயலா்கள், தொகுப்பு பால் குளிா்விப்பு மைய செயலா்களுக்கு பாராட்டு சான்றிதழ், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், ஆதிதிராவிட நல அலுவலா் ந.ராமசந்திரன், தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, உதவி ஆணையா் (கலால்) முருகன், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் இரா.பாலசுப்பிரமணியன், பிற்படுத்தபட்டோா் நல அலுவலா் சீதா, வழங்கல் அலுவலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.