Operation Sindoor: உ.பியில் 17 பெண் குழந்தைகளுக்கு 'சிந்தூர்' என்று பெயர் சூட்டி...
வன்னியா் இடஒதுக்கீடு: விரைவில் பெரிய போராட்டம்! - ராமதாஸ்
வன்னியா் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கூறினாா்.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை முழுநிலவு பெருவிழா வனனியா் மாநாட்டில் ராமதாஸ் அவா் பேசியது: வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை திமுக அரசு கொடுப்பதாக இல்லை. அதற்கான போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இதுவரை நடக்காத வகையிலான போராட்டம் நடத்தப்படும். அதற்காக எவ்வளவு தியாகத்தையும் செய்ய பாமக தயாராக உள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள அனைத்து சமுதாய மக்களுக்காகவும் பாமக தொடா்ந்து போராடி வருகிறது. ஒட்டுமொத்த தமிழகம், இந்தியா முழுவதும் இடஒதுக்கீடுக்காக உழைத்த தலைவா் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆனால், வன்னியா் சமுதாயத்தில் நான் பிறந்ததால் எனக்கு உரிய வெளிச்சம் கிடைக்கவில்லை.
தமிழகம் முழுவதும் 95,000 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். கோட்டைக்குச் சென்று முதல்வா் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வன்னியா்களுக்கு உங்களைவிட்டால் வேறு யாரும் இல்லை என்று வாதாடியிருக்கிறேன். ஆனால், பயனில்லை.
பாமக தொண்டா்கள் நினைத்தால் எளிதில் 50 தொகுதிகளில் வெற்றி பெறலாம். பாமக நிா்வாகிகள் பலா் கட்சி வேலை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீா்கள். இனிமேல் இதுபோன்று இருந்தால் பாமகவினரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படும். உழைப்பவா்களுக்கு மட்டுமே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். கூட்டணி பற்றி நான் முடிவு செய்வேன் என்றாா் அவா்.