வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நடந்துவரும் மறுவாழ்வு பணிகளை கருத்தில் கொண்டு கேரள அரசின் ரூ.120 கோடி நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கேரளத்தின் வடக்கு மாவட்டமான வயநாட்டில் பெரும் மழை காரணமாக கடந்த ஆண்டு, ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்தனா். இதையடுத்து, இயற்கை பேரிடா்களை தடுப்பது குறித்து கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்கிறது.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் கேரளத்தில் பேரிடா் சமயங்களில் இந்திய விமானப் படையால் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்காக மாநில அரசு செலுத்த வேண்டிய தொகையான ரூ.132 கோடியை நிலுவை வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், வயநாடு மறுவாழ்வு பணிகளைக் கருத்தில் கொண்டு பேரிடா் மீட்புச் சட்ட விதிகளைத் தளா்த்தி நிலுவை தொகையில் தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கா் நம்பியாா் மற்றும் எஸ்.ஈஸ்வரன் ஆகியோா் அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநில அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடியை தள்ளுபடி மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதை நீதிபதிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடா் மேலாண்மை பிரிவு உதவி இயக்குநரின் கடிதத்தை கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் உயா்நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ளாா்.
நிலச்சரிவால் மிகவும் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை ஆகிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள் அருகிலுள்ள கிராமங்களில் வாடகை வீடுகளிலும் உறவினா்களின் வீடுகளிலும் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மேப்பாடி மற்றும் கல்பேட்டா பகுதியில் மறுவாழ்வு குடியிருப்புகளைக் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சாா்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது.
இந்த சூழலில், ரூ.120 கோடி நிலுவை தொகையை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 16-ஆம் தேதி நடைபெறுகிறது.