ரூ.5,000 வரவு வைக்கப்படும்.. பிரதமர் மோடி படத்துடன் மோசடி லிங்க்! மக்களே உஷார்!!
`வரவேற்ற அண்ணாமலை; Elite அரசியலென விமர்சிக்கும் வன்னியரசு' - விஜய் ஆளுநர் சந்திப்பும் அரசியலும்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இன்று காலையில் இந்த சம்பவம் தொடர்பாக கைப்பட எழுதிய அறிக்கையை வெளியிட்ட தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க மாநில அரசு கேட்கும் நிவாரண தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
விஜய்யின் நடவடிக்கை ஆதரவாகவும் எதிர்பாகவும் அரசியல் கருத்துகள் எழுந்துள்ளன. விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லாதது என்ற பேசியிருந்ததும் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் நடவடிக்கையை வரவேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவரது பதிவில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது, திமுக நிர்வாகி பாலியல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், விசாரணை குறித்து முன்னுக்குப் பின் முரணாக, காவல்துறையும், அமைச்சர்களும் பேசி வருவதால், திமுக அரசின் விசாரணையில் நம்பிக்கையின்மை குறித்தும், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
"இன்றைய தினம், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய் அவர்களும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், "வழக்கை திசைதிருப்ப தொடர்ந்து முயற்சித்து வரும் திமுக அரசைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரனாக, அனைத்துக் கட்சியினரும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நம் சகோதரிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்." என்றும் கூறியுள்ளார்.
அதே வேளையில் விஜய்யின் நடவடிக்கையை 'பாஜகவின் அரசியல்' என விமர்சித்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, "ஆளுனரை சந்தித்து முறையிடுவதை சாட்டை புகழ் அண்ணாமலை மற்றும் பாஜக ஆதரவாளர்களை வைத்து தான் தில்லி பாஜக அரசியல் செய்வது வழக்கம்.
இப்போது தவெக தலைவர் நடிகர் திரு. விஜய் அவர்களை வைத்து அரசியல் செய்கிறது.
"ஆளுனர் ரவி அவர்களை திரு.விஜய் 15 நிமிடம் சந்தித்தார். ஊடகவியலாளர்களை கண்டு கையசைத்தார். ஆனால், ஊடகத்தினருக்கு பேட்டி கொடுக்காமலே சென்றுவிட்டார். இதற்கு பெயர் தான் Elite அரசியல்." என தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.