வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
கழுகார்: `கடுப்பில் மாண்புமிகுவும் மக்கள் பிரதிநிதியும்’ டு `ஓடும் வேட்பாளர்கள்; திண்டாடும் அதிமுக’
சூரியோதய மாவட்ட இலைக் கட்சியில், சுந்தரமானவருக்கு டஃப் ஃபைட் கொடுத்துவந்தார் ‘கிரீன்’ மாஜி. சுந்தரமானவரின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் குற்றம், குறையைக் கண்டுபிடித்து, மேலிடத்தில் பற்றவைப்பதற்காகவே தனது தலைமையில் ‘கிரீன் பாய்ஸ்’ என்ற குரூப்பையே உருவாக்கிவைத்திருந்தார். மத ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த குற்றச்சாட்டில், சுந்தரமானவரின் பதவி பறிக்கப்பட்டதில், ‘கிரீன் பாய்ஸின்’ பணி முக்கியமானது. ஆனால், கட்சித் தலைமையைச் சரிக்கட்டி, மீண்டும் பொறுப்புக்கு வந்துவிட்டார் சுந்தரமானவர். இந்த நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக அடக்கி வாசிக்கத் தொடங்கியிருக்கிறார் கிரீன் மாஜி. சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின்போதுகூட, வந்த சுவடே தெரியாத அளவுக்குக் கமுக்கமாகவே வந்து சென்றிருக்கிறார் கிரீன். “இனி, சுந்தரமானவரைப் பகைக்கக் கூடாது... அவரோடு பகையை வளர்த்தால், தலைமையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என்று சீனியர் மூலமாகக் கட்சித் தலைமை அட்வைஸ் செய்ததுதான், கிரீனாரின் இந்த அதிரடி மாற்றத்துக்குக் காரணமாம். அநியாயத்துக்கு கிரீனார் பம்ம... சுந்தரமானவரோ, இதுதான் தனக்கான நேரம் என, ‘கிரீன் பாய்ஸை’ பதம் பார்க்கத் தொடங்கியிருக்கிறாராம். ‘நம்மளை பலிகடா ஆக்கிட்டு அண்ணன் தப்பிட்டாரே…’ என்று புலம்புகிறார்களாம் ‘கிரீன்’ பாய்ஸ்!
‘பஞ்சாமிர்த மலைக்கோயிலில், நேரடி நியமன முறையில் 296 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆயத்தமாகிவருகிறது, கோயில்களைக் கண்காணிக்கும் துறை. ‘பணியிடங்களுக்குத் தலா 10 முதல் 25 லட்டுகள் வரை கட்டாயம்’ என்கிறதாம் துறை மேலிடம். கூடவே, இதற்கான அனைத்துக் கணக்கு வழக்குகளும் தனக்குத் தெரியாமல் நடந்துவிடக் கூடாது என்பதிலும் கடுமை காட்டுகிறதாம். “ஏற்கெனவே இங்கு நடந்த சர்வதேச நிகழ்ச்சியிலும் எங்களைப் புறக்கணித்தார் அந்த மாண்புமிகு. இப்போது, பணியிடங்கள் நிரப்புவதிலும் எங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சிபாரிசு செய்யக்கூட முடியாத நிலையை உண்டாக்கியிருக்கிறார். உள்ளூர்காரர்களுக்கு எங்கள் மூலமாக போஸ்ட்டிங் போட்டால்தானே எங்களுக்கு மரியாதை... ஏன் இதில் குறுக்கே வருகிறார் அந்த மாண்புமிகு?” என்று துறை மேலிடத்துக்குக் கேட்கும்படி கொதிக்கிறார்களாம், லோக்கல் ‘இனிப்பு’ மாண்புமிகுவும், ‘தில்’லான மக்கள் பிரதிநிதியும். இந்த விவகாரத்தை, ஆளும் மேலிடத் தரப்புக்கும் கொண்டு செல்லும் முடிவில் இருக்கிறார்களாம்!
‘கட்சிக்காரர்களுக்குப் பெரிய டெண்டர் எதுவுமே கொடுக்கப்படுவதில்லை. எதிர்த்தரப்புக்குத்தான் எல்லாம் கிடைக்கின்றன. ஆளும் தரப்பாக இருந்து என்ன புண்ணியம்..?’ என்று சூரியக் கட்சி செயற்குழுவில் தலைமையிடமே நேரடியாகப் பொங்கியிருந்தார்கள் சீனியர் நிர்வாகிகள் சிலர். அப்போதைக்கு அவர்களை அடக்கினாலும், அது குறித்த தகவல்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறதாம் தலைமை. இந்த நிலையில், வடக்கு மாவட்டத்தில் ஒரு பெரிய அணைக்கட்டைப் புனரமைப்பதற்கான டெண்டரை, இலைக் கட்சியின் நெருங்கிய நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கியிருந்திருக்கிறது துறை மேலிடம். இதனால், கொதித்துப்போயிருக்கும் ஆளும் தரப்புக்கு நெருக்கமான நிறுவனங்கள், ‘200 கோடி மதிப்பிலான டெண்டரை, ஈஸியா தூக்கி எதிர்க்கட்சி ஆதரவு நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டார் துறை மேலிடம்’ என்று தலைமைக்குப் புகார் அனுப்பத் தயாராகிவருகின்றனவாம். விஷயம் தலைமைக்குச் சென்றால் தேவையில்லாமல் விவகாரமாகும் என்பதால், அதைத் தடுக்கும்விதமாக, ‘அடுத்து வரும் எல்லாமே உங்களுக்குத்தான்’ என்று கூறி, சம்பந்தப்பட்ட ‘கலக’ நிறுவனங்களைச் சாந்தப்படுத்திவருகிறாராம் துறை மேலிடம்!
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவையொட்டி, அந்தத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னேற்பாடாக, வேட்பாளர் தேர்வில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க. அதன்படி, கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டவரையே மீண்டும் களத்தில் இறக்க முடிவெடுத்து, அவரிடம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவரோ, “போன வாட்டியே என்னை போண்டி ஆக்கிட்டீங்க. இந்த முறை கட்சி செலவு பண்ணினா நான் நிக்கிறேன். இல்லைன்னா ஆளை விடுங்க...” எனப் பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கிவிட்டாராம். ஷாக்கான கட்சித் தலைமை, மனம் தளராமல் அடுத்த முயற்சியாக ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆற்றலானவரை அணுகியதாம். அவரும் ‘2026-ல் கண்டிப்பா நிக்கிறேன். இப்ப வேண்டாம்’ என்று கைவிரித்துவிட்டாராம். இதனால், வெறுத்துப்போன தலைமை, ‘விக்கிரவாண்டிபோல இந்த இடைத்தேர்தலையும் புறக்கணித்துவிடலாமா..?’ எனத் தீவிர யோசனையில் இருக்கிறதாம்!
தமிழக காவல்துறையில், பதவி உயர்வு, இடமாற்றம் என 63 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. “இந்தப் பணியிட மாற்றம், மிக மிக அவசரகதியில், திட்டமிடல் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது” எனப் புலம்புகிறார்கள் சீனியர் காக்கிகள். வழக்கமாக இதுபோல பெரிய அளவிலான பணியிட மாற்றங்கள் நடந்தால், நீண்டகாலமாக காலியாகக் கிடக்கும் பதவிகளுக்குத்தான் முதலில் ஆட்களை நிரப்புவார்கள். ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக நடந்திருக்கின்றன. உதாரணமாக, நீண்டகாலமாக காலியாக இருக்கும் காஞ்சிபுரம், மதுரைக்கு டி.ஐ.ஜி-க்கள் நியமிக்கப்படவில்லையாம். அதேபோல் சென்னை, ஆவடி போக்குவரத்துப் பிரிவிலும் இரண்டு துணை கமிஷனர்களின் பணியிடங்கள் இப்போதும் காலியாகவே இருக்கின்றனவாம். “உடனடியாகத் தேவைப்படும் பணியிடங்களுக்கு ஏன் முறையாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை..?” என்பதுதான் சீனியர் காக்கிகளின் பெரும் புலம்பலாக இருக்கிறது!