15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
ட்ரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா கார்; ``தீவிரவாத நடவடிக்கையாக இருக்கலாம்" - எலான் மஸ்க்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில், அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டல் இருக்கிறது. நேற்று ஹோட்டல் நுழைவாயிலில் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க்குக்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் டெஸ்லா கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளூர் நேரம் காலை 8:40 மணிக்கு அந்தக் கார் திடீரென வெடித்து தீப்பற்றியது. இந்த சம்பவத்தில் காரின் ஓட்டுநர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், காரிலிருந்து பட்டாசு வெடிப்பதைப் போல திடீரென சிறு சிறு வெடிப்பு நடக்கிறது. அது அப்படியே பெரிதாக வெடித்து தீப்பற்றுகிறது. புதன்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 15 பேர் பலியான நிலையில், அமெரிக்க ராணுவ வீரர் ஷம்சுத்-தின் ஜபார் என்பவர் கைது செய்யப்பட்டார். அதுபோன்றதொரு தாக்குதலாக ஹோட்டலுக்கு வெளியே நடந்த தாக்குதலும் இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து எலான் மஸ்க், ``லாஸ் வேகாஸில் உள்ள ட்ரம்ப் இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு வெளியே சைபர்ட்ரக் வெடித்ததற்கும், அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடந்த பயங்கரமான சம்பவத்தில் 15 பேர் பலியான சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம். இந்த இரண்டு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட வாகனங்கள் ஒரே கார் வாடகை தளமான டுரோவில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
ட்ரம்ப் ஹோட்டல் வெளியே டெஸ்லா கார் தீப்பிடித்ததற்கு காரின் கோளாறு காரணமல்ல. தீவிரவாத செயல் போல் தெரிகிறது... காரில் பட்டாசு போன்ற ஏதோ ஒன்று இருந்திருக்கிறது. அது வெடித்ததால்தான் கார் தீப்பற்றியிருக்கிறது. இது தொடர்பாக எங்கள் நிறுவனம் ஆய்வு செய்து, விசாரித்து வருகிறோம்" என்றார்.