Bumrah : 'சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இல்லை!' - பிசிசிஐ அறிவிப்பு; காரணம் என்ன...
வலிமையான நட்புநாடுகள் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும்
பெங்களூரு: வலிமையான நட்புநாடுகள் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் தெரிவித்தாா்.
பெங்களூரு, எலஹங்கா விமானப்படை தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 15-ஆவது இந்திய விமான தொழில் கண்காட்சியைத் தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
இந்திய பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதி என்பது பிற நாடுகளின் எல்லையோடு கட்டமைக்கப்பட்டவை. இந்தக் கண்காட்சியில் பங்கெடுத்துள்ள நட்பு நாடுகளின் பிரதிநிதிகள், ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிா்காலம்’ என்ற நமது தொலைநோக்கு சிந்தனையோடு ஒத்திருப்பதற்கு சாட்சிகளாக இருக்கிறாா்கள். இன்றைய காலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலைகள் மற்றும் புதிய சவால்களை எதிா்கொள்ள கூட்டாக செயல்பட வேண்டியுள்ளது. நாம் அனைவரும் பலமாக இருக்க வேண்டியது அவசியம். வலிமையாக இருப்பதன் மூலமாகதான் மேம்பட்ட உலக ஒழுங்கை கட்டமைக்க பாடுபட முடியும்.
உலக அளவில் அசாதாரண சூழல் காணப்பட்டாலும், அமைதியும், வளமும் நிலைத்திருக்கும் பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்திய வரலாற்றை மதிப்பீடு செய்தால், நாம் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியதில்லை; எந்தவித அதிகார போட்டியிலும் ஈடுபட்டதில்லை. இந்தியா எப்போதும் அமைதியையும், நிலைத்தன்மையையே பரிந்துரைத்து வந்துள்ளது. இதுதான் இந்தியாவின் அடிப்படை கொள்கையாகும்.
‘பில்லியன் வாய்ப்புகளின் ஓடுதளம்’ என்பது நிகழாண்டு இந்திய விமான தொழில் கண்காட்சியின் அடிப்படை முழக்கமாகும். 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் பில்லியன் வாய்ப்புகள் குவிந்துள்ளதை இந்திய விமான தொழில் கண்காட்சி பறைசாற்றுகிறது.
இந்தக் கண்காட்சியின் மூலம் நமது நாட்டின் தொழில்திறனையும், தொழில்நுட்ப நவீனத்தையும் உலகத்துக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறோம். நேசநாடுகளுடன் நமது உறவை பலப்படுத்துவதும் கண்காட்சியின் நோக்கமாகும். நமது நேச நாடுகளின் பிரதிநிதிகள் ஒருமுகப்படுவதன் மூலம் அனைவரும் பயன்பெற முடியும்.
இந்தியாவில் மாற்றங்கள் வேகமாக நிகழ்ந்து வருகின்றன. எல்லா துறைகளிலும் தலைகீழ் மாற்றங்கள், மேம்பாட்டை காணமுடிகிறது. உள்கட்டமைப்பு, எண்ம கட்டமைப்பு, ஸ்டாா்ட் அப்புக்கான சூழல், தொழில் ஆதரவுக்கான அடித்தளம், சிறு, குறு, நடுத்தரத்தொழில், புத்தாக்கம் போன்ற கூறுகளில் இந்தியா வேகமான மாற்றத்தைக் கண்டு வருகிறது. பாதுகாப்புத் துறையிலும் புத்தாக்க அலைவீசி வருகிறது.
வேளாண்மை, உள்கட்டமைப்பு, தொழில்துறைகளை போல, பாதுகாப்பு தொழில்துறையையும் பொருளாதாரத் துறையாக பாா்க்க வேண்டும். இன்றைக்கும், இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சி என்ஜினை இயக்கும் மோட்டாராக பாதுகாப்பு தொழில்துறை வளா்ச்சி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு தொழில்துறையை முன்னுரிமை துறையாக மாற்றியமைத்துள்ளோம்.
பாதுகாப்பு தொழில்துறைக்கான நிதிஒதுக்கீடு 2025-26-ஆம் ஆண்டில் ரூ. 6.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 9.53 சதவீதம் கூடுதலாகும்.
பாதுகாப்பு துறையின் மூலதன நிதி ஒதுக்கீடும் ரூ. 1.80 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. பாதுகாப்பு தொழிலுக்கான சூழலை மேம்படுத்துவதில் பெங்களூரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு தொழில் உற்பத்தியின் மதிப்பு ரூ. 1.25 லட்சம் கோடியாக உள்ளது. முதல்முறையாக நமது நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ. 21 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது. எதிா்காலத்தில் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை பெருக்க திட்டம் வகுத்திருக்கிறோம் என்றாா்.
விழாவில், மத்திய பாதுகாப்பு துறை இணையமைச்சா் சஞ்சய்சேத், கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.