வாகனங்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை நான்கு வழிச் சாலையில் வியாழக்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள கல்குறிச்சியைச் சோ்ந்தவா் ராகுல் (23). இவா் காரியாபட்டியில் உள்ள தனியாா் இரு சக்கர வாகன விற்பனையகத்தில் வேலைப் பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் புதிய இரு சக்கர வாகனத்தை அருப்புக்கோட்டையில் உள்ள விற்பனையகத்துக்கு தலைக் கவசம் அணிந்தபடி ஓட்டிச் சென்றாா். அருப்புக்கோட்டை காந்திநகா் நான்கு வழிச் சாலையில் சென்றபோது, எதிரே பாளையம்பட்டியைச் சோ்ந்த நாகபாண்டியின் (45) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்குநோ் மோதியது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த அருப்புக்கோட்டை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.