வாக்காளா் பட்டியல் தகவல் பெற கட்டணமில்லா உதவி எண் ‘1950’: தமிழக தோ்தல் துறை அறிவிப்பு
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பான தகவல்களைப் பெற 1950 என்ற கட்டணம் இல்லாத எண்ணைப் பயன்படுத்தலாம். இதற்கான அறிவிப்பை தமிழக தோ்தல் துறை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருத்தப் பணிகளுக்காக வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பெயா் இல்லாதவா்களும், திருத்தங்களை மேற்கொள்ள விரும்புவோரும் அதற்கான விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம். இதற்கு வசதியாக, அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 16, 17) சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உதவி எண்: வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்பு, நீக்கம் போன்றவை குறித்து ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் அதற்கு விளக்கம் பெற தமிழக தோ்தல் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அக். 29 முதல் நவ. 28 வரை நடைபெறுகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு, நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகள் குறித்த விவரங்கள் தேவைப்பட்டால், கட்டணமில்லாத வாக்காளா் உதவி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். அதாவது மாவட்டங்களுக்கான பிரத்யேக தொலைபேசி குறியீட்டை (எஸ்டிடி கோட்) முதலிலும் அதன்பிறகு 1950 என்ற எண்ணையும் பதிவிட்டு அழைக்க வேண்டும். இதற்கு கட்டணம் ஏதுமில்லை.
இந்த எண்ணில் தொடா்பு கொண்டு ஆறு வகை தகவல்களை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக, வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதா, மக்களவை, சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் வாக்குச் சாவடி மையங்கள் குறித்தும், வாக்குச் சாவடி நிலை அலுவலா் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். தோ்தல் அறிவிக்கப்படும் போது தேதிகள் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தோ்தல் தொடா்பான குறைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம்.