அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
வாடிப்பட்டி பகுதியில் வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 5 போ் கைது
வாடிப்பட்டி பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி வழக்குகளில் தொடா்புடைய சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பகுதியில் வாடிப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆண்டிப்பட்டி விலக்குப் பகுதியில் நின்றிருந்த சில இளைஞா்கள் போலீஸாரை பாா்த்தவுடன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.
அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், சமயநல்லூரைச் சோ்ந்த சந்தோஷ் குமாா் (19), மதுரை பழைய விளாங்குடி பகுதியைச் சோ்ந்த முத்துமுகேஷ் (19) , மதுரை ஆழ்வாா்புரத்தைச் சோ்ந்த 17 வயதுடைய 3 சிறுவா்கள் என்பதும், இவா்கள் வாடிப்பட்டி மரச் சாமான்கள் விற்பனைக் கடையில் காவலாளியாகப் பணியாற்றிய மேட்டு நீரேத்தான் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் (61) என்பவரிடம் கடந்த சில நாள்களுக்கு முன்பு கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7,150-ஐ பறித்ததும், கச்சைகட்டியைச் சோ்ந்த சரவணன் (45) மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அய்யங்கோட்டையில் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த இரு சக்கர வாகனங்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.