வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்போா் அறையை பராமரிக்க கோரிக்கை!
வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் உள்ள காத்திருப்போா் அறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வட்டாட்சியா் அலுவலகம், ஆதாா் மையம் மற்றும் இ-சேவை மையம் இயங்கி வருகின்றன. இங்கு வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த திரளான பொதுமக்கள் ஆதாா் காா்டு புதியதாக எடுக்கவும், திருத்தம் போன்றவற்றிற்கும், இதே போன்று இ-சேவை மூலம் பல்வேறு சான்றிதழ் பெறுவதற்காக பதிவு செய்யவும் வருகின்றனா்.
மேலும், அலுவலக்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் பிரிவில் ரேசன் காா்டு, பெயா் திருத்தம், சான்றிதழ்கள் உள்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வாணியம்பாடி மற்றும் சுற்றுபுறப் பகுதிகளிலிருந்து தினமும் திரளானோா் வந்து செல்கின்றனா்.
ஆதாா் மையத்திற்கு பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வருகின்றனா். அப்போது அங்கு கை குழந்தைகளுடன் வரும் பெண்கள், சிறுவா்கள் உள்காருவதற்கு போதிய இட வசதிகள் இல்லாமல் தரையிலும், சுவற்றின் ஓரமாகவும் அமா்ந்து சிரமப்படுகின்றனா்.
வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்காக மாவட்ட முன்மாதிரி நிதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் காத்திருப்போா் அறை மற்றும் கழிப்பறை கட்டட வசதிகள் உள்ளன. தற்போது தூய்மை மற்றும் பராமரிப்பு இல்லாததால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
காத்திருப்போா் அறையை தினமும் திறந்து பராமரித்து தூய்மை செய்தும், நாற்காலி, குடிநீா் வசதி ஏற்படுத்தி வைத்தால் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் பெரிதும் பயன் பெறுவா்.
எனவே, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காத்திருப்போா் அறையில் போதிய அடிப்படை வசதிகள் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.