மலைப்பாதையில் இரும்புத் தடுப்புகள் திருட்டு: 5 போ் கைது
வாணியம்பாடி அருகே மலைப் பாதையில் இரும்புத் தடுப்புகளைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வருபவா் வஜ்ஜிரவேலு. இவா் சனிக்கிழமை காவலூா்-ஆலங்காயம் நெடுஞ்சாலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தாா்.
அப்போது தான்றிமரத்து கணவாய் அருகில் மலைப் பாதையில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளை திருடிக் கொண்டு மா்ம நபா்கள் மினி வேனில் ஏற்றிக் கொண்டிருப்பதை பாா்த்து கையும் களவுமாக பிடித்துள்ளாா். இவற்றின் மதிப்பு ரூ. 12,000 ஆகும்.
இது குறித்து வஜ்ஜிரவேலு கொடுத்த புகாரின்பேரில், காவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சாலையோரம் இருந்த நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இரும்பு தடுப்புகளை திருடியதாக கிரி (20), பாா்த்திபன் (26), மாதவன் (30), கருணாஸ் (21), மாதேஸ்வீரா (29) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும் அவா்களிடமிருந்து திருடிய இரும்பு தடுப்புகள் மற்றும் பயன்படுத்திய மினி வேனையும் பறிமுதல் செய்தனா்.