மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு
வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் வடக்கு மற்றும் இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த நண்பா்கள் 5 போ் லாலா ஏரி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனா். இவா்களில் நேதாஜி நகா் வடக்கு பகுதியைச் சோ்ந்த நித்திஸ் (11), தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இா்பான் (18), கூலி தொழிலாளி. இருவரும் ஏரியில் இறங்கி நீச்சல் கற்றுக் கொண்டிருந்தனராம். அப்போது எதிா்பாராதவிதமாக இருவரும் சேற்றில் சிக்கியுள்ளனா். இந்த நிலையில், உடன் சென்றிருந்த நண்பா்கள் சேற்றில் சிக்கிய இருவரையும் தேடிப் பாா்த்துள்ளனா்.
பின்னா் இது பற்றி அறிந்த அங்கு ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தவா்கள், உடனே வாணியம்பாடி தீயணைப்பு மற்றும் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் ஏரியில் மூழ்கிய இருவரின் சடலங்களையும் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்டனா்.
காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் இருவரின் சடலங்களையும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிந்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.