வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஹைபிரிட் முறையில் துபை பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.
அரையிறுதியில் வாய்ப்பு யாருக்கு?
குரூப் பி பிரிவில் எந்தெந்த அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்று இன்னும் முடிவாகவில்லை. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஒரு வெற்றி, ஒரு போட்டியில் முடிவில்லை என முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.
இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். இந்த நிலையில், யார் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும். மேலும், தனது கடைசி போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறும்.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் மழையால் பாதிக்கப்பட்டதால், அந்த அணிகளுக்கு 3 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் கடைசிப் போட்டியில் வெற்றியாவது அல்லது ஒரு புள்ளிகளையாவது வென்றாக வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன.