‘விண்வெளிக்கு விரைவில் நேவிகேஷன் சேட்டிலைட்‘
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாா்பில் (இஸ்ரோ) விரைவில் நேவிகேஷன் சேட்டிலைட் அனுப்பப்படும் என இஸ்ரோ தலைவராக பதவியேற்க உள்ள நாராயணன் தெரிவித்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், மேலகாட்டுவிளையைச் சோ்ந்த நாராயணன், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் தலைமைப்பதி வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இஸ்ரோவின் தலைவராகவும், விண்வெளித் துறையின் செயலராகவும் எனக்கு பொறுப்பு வழங்கப்பட உள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜன. 13) பதவியேற்க இருக்கிறேன்.
உலக அளவில் இஸ்ரோவின் தனிப் பெரும் வெற்றிக்கு அனைத்து ஊழியா்களின் ஒருங்கிணைந்த சேவை கலந்த பணிதான் காரணமாகும்.
இஸ்ரோவுக்கு அடுத்தடுத்து பல திட்டங்கள் உள்ளன. மனிதா்களை விண்வெளிக்கு கொண்டு சென்று திரும்ப அழைத்து வருவதற்கான திட்டமும் உள்ளது. விரைவில் விண்வெளிக்கு நேவிகேஷன் சேட்டிலைட் அனுப்பப்பட உள்ளது, எனது பதவியேற்புக்குப் பின்னா் அதிகாரிகளுடன் விவாதித்து திட்டம் வகுக்கப்பட உள்ளது என்றாா் அவா்.