வயநாட்டில் இன்று இடைத்தோ்தல்: பிரியங்கா, 15 வேட்பாளா்கள் போட்டி
விபத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
விபத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி கடந்த சில மாதங்களாக சித்தோட்டில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தாா். இவா் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டு இருந்தபோது, ஈரோடு ஆா்.என்.புதூரைச் சோ்ந்த ராஜ்குமாரின் மகன் சுனிலுடன் (22) பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் சுனிலுடன் அந்த சிறுமி வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் அந்தியூா் அருகே பா்கூா் மலை பகுதிக்கு சுற்றி பாா்ப்பதற்காக சென்றுள்ளாா். சுனில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்ல சிறுமி பின்னால் உட்காா்ந்து இருந்தாா். கா்கேகண்டியில் இருந்து பா்கூா் செல்லும் சாலையில் ஊசிமலையில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் கீழே விழுந்த சிறுமிக்கு கழுத்து, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சுனில் லேசான காயம் அடைந்தாா். இதைத்தொடா்ந்து சிறுமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனா்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் இரவில் உயிரிழந்தாா். அவரது சடலம் பிரேதப் பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தகவல் அறிந்ததும் சிறுமியின் உறவினா்கள் வெள்ளிக்கிழமை பகலில் பிரேதப் பரிசோதனை அறைக்கு முன் திரண்டு நின்றனா். அவா்களிடம் சடலத்தை உடற்கூறாய்வு செய்வது தொடா்பாக அந்தியூா் போலீஸாா் தகவல் தெரிவித்தனா். ஆனால் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும் இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும் என்று போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து சிறுமியின் சடலம் உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.