நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாள...
வியாபாரியிடம் போலீஸ் போல் நடித்து ரூ.4 லட்சம் பறிப்பு: 4 போ் கைது, 10 கைப்பேசிகள், காா் பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே போலீஸ் உடை அணிந்து பெங்களூா் வியாபாரியிடம் ரூ.4 லட்சத்தை பறித்து சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூா் சிந்தாமணி பகுதியை சோ்ந்தவ வியாபாரி சதீஷ் (37). இவா் தனக்கு சொந்தமான வீட்டை அடமானம் வைத்து ரூ.2 கோடி பணம் வாங்கித் தருமாறு அவரது காா் ஓட்டுநா் கிருஷ்ணகுமாரிடம் கேட்டுள்ளாா். அப்போது கிருஷ்ணகுமாா் சென்னையில் உள்ள நண்பா்களிடம் கூறி ரூ.2 கோடி பணம் கடனாக வாங்கித் தருவதாகவும் இதற்கு அசல் வீட்டு பத்திரம் மற்றும் பத்திர கட்டணம் ரூ.4 லட்சம் செலவாகும் என கூறினாா்.
இதையடுத்து குமாா் மற்றும் ரமேஷ் ஆகியோா் சதீஷை தொடா்பு கொண்டு பணம் ரூ.2 கோடி தயாராக உள்ளது என்றும் ரூ.4 லட்சம் மற்றும் வீட்டு பத்திரத்தை எடுத்து வருமாறு கூறியதையடுத்து கடந்த செப். 19-ஆம் தேதி பெங்களூரில் இருந்து ரமேஷ், ஓட்டுநா் கிருஷ்ணகுமாா் உள்பட 4 போ் வாணியம்பாடி சுங்கச்சாவடி அருகே வந்த போது அங்கு வந்த குமாா், ரமேஷ் இருவரும் சதீஷிடம் பணம் மற்றும் வீட்டுப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு மற்றொரு காரில் கிருஷ்ணகுமாா், சதீஷ் ஆகிய இருவரையும் காரில் பா்கூா் நோக்கி அழைத்து சென்றனா். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்புக்குட்டை அருகே போலீஸ் உடை அணிந்து காரில் வந்த மா்ம நபா்கள் சதீஷ் வந்த காரை வழிமறித்து காரில் இருந்த ரூ.4 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து சதீஷ் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். தனிப்படை போலீஸாா் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் சென்னையைச் சோ்ந்த தேவராஜ்(31), அரூா் பகுதியை சோ்ந்த கோபி(29), வேலூா் வேலபாடியை சோ்ந்த ராஜேஷ் பாபு(50) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேரை தேடி வந்த நிலையில் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை வாணியம்பாடி அடுத்த மாரப்பட்டு கூட்டு ரோடு அருகே நடத்திய வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் ஒரு காரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் 4 பேரையும் நாட்டறம்பள்ளி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனா்.
விசாரணையில் வேலூா் வேலப்பாடி பகுதியைச் சோ்ந்த குமரவடிவேல்(57), வாணியம்பாடியைச் சோ்ந்த சையத்அலி(37), காட்பாடியைச் சோ்ந்த ஜெகன்(37), அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் குமாா்(33) ஆகிய 4பேரும் போலீஸ் உடை அணிந்து பெங்களூா் வியாபாரி சதீஷிடம் பணம் பறித்துச்சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் அவா்களிடம் இருந்த காா், 10 கைப்பேசிகள்மற்றும்அவா்கள் பயன்படுத்திய போலீஸ் உடைகளை பறிமுதல் செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.